ஆன்லைன் ரம்மிக்கு தடை – அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்..!!

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும், தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இணைய வழி சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்ததோடு, தற்கொலைகளும் அதிகரித்ததால் உடனடியாக அதனை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வகைசெய்யும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இணையவழி சூதாட்டங்களில், இளையோர், தங்களது பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக, அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோரையும், அவற்றை நடத்துவோரையும் தண்டிக்க வழிவகை ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தடையை மீறி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களை நடத்துவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களுக்கான பொழுதுபோக்காக அமைந்த ஆன்லைன் சூதாட்டங்கள், நாளடைவில் மக்களின் பணத்தை பறிக்கும் விளையாட்டாக மாறியது.

இந்த சூதாட்டங்களில் அதிகளவில் பணத்தை இழந்து, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே