பி.எட். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கை கவுன்சிலிங் நடத்த, உயர் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., எம்.எட்., மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தாமதமாகி வந்த நிலையில், கவுன்சிலிங் நடத்த அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டுதலை, உயர் கல்வித் துறை நேற்று வெளியிட்டது. அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நடத்த கல்லுாரி கல்வி இயக்குநருக்கு உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை விவரங்களை https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அக்டோபர் 6ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.