காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ம் தேதிக்குள் திரும்பபெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 17-ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை நிர்ணயம் செய்வேன். எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும் என்பது தான் நாட்டின் தற்போதைய நிலை என்று கூறினார்.

மேலும், நான் காங்கிரஸ் கட்சித் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் மற்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான அனைவரின் முன்மொழிவையும் ஏற்குமாறு நான் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அடுத்த தலைவராக வரக்கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே