அயோத்தி வழக்கிற்கான தீர்ப்பு வர இருக்கும் நிலையில் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு வரும் சூழலில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்த ரயில்வே நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது.
டெல்லி, மும்பை, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 78 முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை, வாகனங்கள் நிறுத்துமிடம், நடைபாலம், பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்கவும் ரயில்வே காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர சோதனையில் ஈடுபடவும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் ரயில்வே காவல்துறையினர் விடுப்பு எதுவும் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நான்காயிரம் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆயுதமேந்திய காவலர்கள், துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தியில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வேறு ஊர்களில் வசிக்கும் உறவினர்கள் வீட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
சிலர் முன்னெச்சரிக்கையாக உணவுப் பொருள்களை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.