நாடு முழுதும் மொஹரம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க இயலாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மொஹரம் பண்டிகை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஊர்வலத்திற்கு அனுமதி கொடுப்பதால் குழப்பம் ஏற்படும் என்றும்; கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டும் நிலை ஏற்படும் என்றும் காரணம் தெரிவித்துள்ளனர்.

மொஹரம் பண்டிகை தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஊர்வலங்களை நடத்துவது வழக்கம்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மொஹரம் பண்டிகை ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எந்தவிதமான மத ஊர்வலத்திற்கும் அரசு அனுமதி அளிக்கவில்லை. 

சில தளர்வுகளுடன் சிறு கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் நடைபெறும் தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது. அரசும் நீதிமன்றமும் அனுமதி தர மறுத்து விட்டது.

இந்த நிலையில் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சையது கல்பே ஜாவத் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பாப்டே, ஒரு குறிப்பிட மத ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தால் குழப்பம் ஏற்படும்.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை சாடுவார்கள். ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கும் நீங்கள் பூரி ஜெகன்நாத் யாத்திரையை மேற்கோள் காட்டுகிறீர்கள்.

அதற்கு அனுமதி கொடுத்தது வேறு. இந்த ஊர்வலம் முற்றிலும் வேறு.

பூரி ஜெகன்நாத் கோவில் யாத்திரையானது ஒரு குறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட பாதை வழியாக இருந்தது. பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை வழக்கில் இருந்த அபாயத்தை மதிப்பிட்டு நாங்கள் தீர்ப்பை வழங்கினோம்.

ஆனால், நீங்கள் ஒட்டு மொத்த நாட்டிற்குமாக பொதுவாக அனுமதி கேட்கிறீர்கள்.

மக்களின் சுகாதார விஷயத்தில் நாங்கள் துணிந்து முடிவு எடுக்க முடியாது.

ஒரு இடத்திற்கு மட்டும் நீங்கள் கோரினால், அங்குள்ள அபாயம் பற்றி நாங்கள் மதிப்பீடு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

மொஹரம் ஊர்வலத்தை லக்னோவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையிட்டப்பட்டது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த முறையீட்டை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே