ஆவணங்களை சமர்பிக்க ஒரு வாரம் கெடு விதித்து பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒரு வாரத்திற்குள் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், அவரை பணியில் இருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தனக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது.

அதேசமயம் சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் ஆவணங்களை ஒப்படைக்காததால், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூசன், எம்.ஆர் ஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பணி நீட்டிப்புக் காலம் முடிவடைந்த பின்பு, வழக்கு தொடர்பான ஆவணங்களை வைத்திருக்கக்கூடாது என்றும் ஆவணங்களை உடனடியாக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார். 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே