முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஷிகர் தவானும் கே.எல். ராகுலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நிலைத்து நின்று ஆடிய தவான் 74 ரன்களில் கம்மின்ஸ் பத்து வீச்சில் அகாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 49.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியா 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்களின் பாட்னர்ஷிப்பை பிரிப்பதற்கு விராட் கோலி வகுத்த வியூகங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இறுதியில் விக்கெட் இழப்பின்றி 37.4 ஓவருக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

ஆட்ட நேர இறுதியில் டேவிட் வார்னர் 128 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 110 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே