அதிவேக சாதனைக் கூட்டணிக்குப் பிறகு 116 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து..

புனேயில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி. ஷிகர் தவான் ஆட்ட நாயகன், குருணால் பாண்டியா உலக சாதனை ராகுல் பேக் டு பார்ம், 116 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, பிரசித் கிருஷ்ணா அறிமுகத்தில் 4 விக்கெட்டுகள் முழு விவரமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

புனேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து 135/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத் தோல்வி கண்டது.

இந்திய அணியில் ஷிகர் தவான் ‘கப்பர் இஸ் பேக்’ என்று ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் ஒரு இன்னிங்ஸை ஆடி 98 ரன்களில் ஸ்டோக்ஸிடம் வெளியேறினார். விராட் கோலி 56 ரன்களுக்குப் பிரமாதமாக ஆடினார், ராஜ டிரைவ்களுடன் அவர் இந்தியாவில் 10,000 ரன்களைக் கடந்த 2வது வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவர்தான். ஷ்ரேயஸ் அய்ய்ர், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 205/5 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து கோட்டை விட்டது.

கடைசி 10 ஓவர்களில் 112 ரன்களை கே.எல்.ராகுல், குருணால் பாண்டியா குவித்தனர், குருணால் பாண்டியா 26 பந்துகளில் அரைசதம் கண்டு உலக சாதனை படைத்தார் அறிமுக ஒரு நாள் போட்டியில் அதிவேக அரைசதத்தில் குருணால் பாண்டியா உலக சாதனை படைத்தார். கடைசியில் அவர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ராகுல் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் அபாரமான 4 சிக்சர்களுடன் 62 நாட் அவுட் என்று இருவரும் ஸ்கோரை நம்ப முடியாத 317 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே சிறப்பாக வீசி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ இணைந்து இந்தியப் பந்து வீச்சை இப்படி அப்படி என்றில்லாமல் மொத்தமாக புரட்டி எடுத்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ அந்தக் கால சச்சின் டெண்டுல்கர் போல் புதுவகை ஆக்ரோஷ அதிரடி முறையில் வெளுத்து வாங்கினார். 66 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 94 ரன்கள் விளாசினார், அதுவும் அறிமுக பவுலர் பிரசித் கிருஷ்ணாவின் தொடக்க ஓவர்களை வெளுத்து வாங்கிவிட்டார். பிரசித் கிருஷ்ணா ஒரு கட்டத்தில் 3 ஓவர் 37 ரன்கள் என்று சாத்து வாங்கினார்.

இருவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 135 ரன்களை விளாசினர். இருவருக்கும் இது 12வது ஒருநாள் சதக்கூட்டணி. இருவரும் 9.41 என்ற விகிதத்தில் ரன் குவித்தனர். இது இரண்டாவது அதிவேக சதக்கூட்டணியாகும். ஆனால் தோல்வியில் முடிந்த அதிவேக சதக்கூட்டணி. இருவரும் ஸ்காட்லாந்துக்கு எதிராக 10.14 என்ற ரன் விகிதத்தில் 129 ரன் கூட்டணி அமைத்ததுதான் உலகின் அதிவேக முதல் விக்கெட் சதக்கூட்டணியாகும். அப்போதுதான் பிரசித் கிருஷ்ணா ஜேசன் ராயை (46) வீழ்த்த, அடுத்த 17 பந்துகளில் 2 ரன்கள்தான் வந்ததோடு 2 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் பிரசித் கிருஷ்ணா காலி செய்தார்.

மிடில் ஓவர், இறுதி ஓவர் தாதாவான ஷர்துல் தாக்கூர், பேர்ஸ்டோ, மோர்கன், பட்லர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் 9 ஓவர் 30 ரன்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்த பிரசித் கிருஷ்ணா 54 ரன்களுக்கு அறிமுகத்திலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். 135 ரன்களுக்கு நோ-லாஸ் 251 ரன்களுக்கு ஆல் அவுட். இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ளன. 116 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மகாசரிவு கண்டது இங்கிலாந்து.

ஆட்ட நாயகன் விருது குருணால் பாண்டியாவுக்குக் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 98 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே