ஆப்பிள் ஐபோன் 11 சீரீஸ் வரும் செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், க்யூபெர்டினோவில் உள்ள தலைமையகத்தில் இந்த ஆண்டும் 3 மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அவை ஐபோன் 11, 11 புரோ, 11 புரோ மேக்ஸ் ஆகிய ரகங்கள் ஆகும்.

அவற்றின் அம்சங்கள் எனக் கூறப்படும் சில தகவல்களை சீனாவின் மை டிரைவர்ஸ் என்ற இணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 6.1 அங்குல எல்.சி.டி. திரை கொண்ட ஐபோன் 11, 12 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, அதே மெகா பிக்சல் கொண்ட 2 பின்புற கேமராக்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

3110 mAh பேட்டரியும், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ள இது 53 ஆயிரத்து 700 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. 5 புள்ளி 8 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்ட ஐபோன் 11 புரோ, 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும், பின்புறம் அதே மெகாபிக்சலில் 3 வகையான சென்சார் கொண்ட கேமராக்களும் இருக்கும் என அந்த தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

3190mAh பேட்டரி திறன் கொண்ட இந்த மாடல் 71 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரும் எனக் கூறியுள்ளது. 6 புள்ளி 5 அங்குல ஓ,எல்.இ.டி. திரையுடன் 3500 mAh பேட்டரி திறனுடன் வரும் ஐபோன் 11 புரோ மேக்ஸ், புரோ மாடலைப் போன்றே கேமரா வசதிகளைக் கொண்டுள்ளது.

இது 78 ஆயிரத்து 800 ரூபாய் என்ற விலையில் வரும். மூன்று மாடல்களுமே A13 பிராசசரில் இயங்கும் என்றும், 512 ஜிபி சேமிப்பகம் கொண்டது என்றும் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே