உயரும் ஜிஎஸ்டி வரி..!!!

ஜிஎஸ்டி வரி வருவாயை அதிகரிக்கும் வகையில், குறைந்தபட்ச வரி விகிதமான 5 சதவீதத்தை 9 முதல் 10 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொருளாதார சுணக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்திருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் அது ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடியை எட்டியது.

இருப்பினும் போதிய வரி வசூல் இல்லாததால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதனால் வரி விதிப்பில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலிடம் பல்வேறு மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தற்போது குறைந்தபட்ச வரிவிகிதமான 5 சதவீதத்தை 9 அல்லது 10 சதவீதமாக உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

12 சதவீத வரி வரம்பை நீக்கிவிட்டு அதற்குட்பட்ட 243 பொருட்களுக்கு 18 சதவீதமாக வரி நிர்ணயம் செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள், ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகை வசூலிக்கும் தங்கும் விடுதிகள், சொகுசு வீடுகளில் இயங்கி வரும் கம்பெனிகள், பிராண்ட் அல்லாத பன்னீர், பட்டுகள் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே