இன்று தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு தொழிற்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து, ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் தமிழகம், தெலங்கானா உள்பட பல்வேறு மாநில அரசு ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (23/04/2020) காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் சில தொழிற்சாலைகளைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது பற்றியும், கரோனா பரவாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்களும், தலைமைச் செயலாளர், தொழில்துறையைச் சார்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே