தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்த செய்தி, இ-பைக் பயன்படுத்துவோருக்கும், பயன்படுத்த விரும்புவோருக்கும் அதிர்வைத் தருவதாக மாறி இருக்கிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக பார்க்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) ஆபத்து நிறைந்ததா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஊக்குவிக்கும் மத்திய மாநில அரசுகள்

சாலைகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு மாற்றாக வரும், மின் வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்ற இருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை ஒப்பிடும் போது, மின் வாகனங்களால் பெருமளவு மாற்றம் நிகழ உள்ளது. இதனால் தான் மத்திய, மாநில அரசுகள் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளன.

5 மடங்கு அதிகரிக்கும் விற்பனை

இதன் காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியாக உயரும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் மட்டும் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் தற்போது 12 லட்சம் மின் வாகனங்கள் (Electric Vehicles) இருக்கின்றன. ஆனால் இதுவே

இந்த ஆண்டின் இறுதியில் 40 லட்சமாக உயரும் என்று மத்திய அரசு கணிக்கிறது. அதிலும் குறிப்பாக இருசக்கர மின்சார வாகனங்களின் விற்பனையானது 5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் நாட்டில் பல்வேறு இடங்களில் நேரிடும் மின் வாகன விபத்துகளும், தெலங்கானாவில் நேற்று நிகழ்ந்த பயங்கர விபத்தும், மின் வாகனங்கள் பயன்படுத்துவோரிடையே அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. ஆகவே மின் வாகனங்களின் சாதக, பாதகங்களையும், பாதசாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் தொடங்கி, அதன் பேட்டரி பிரச்னை வரை ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

தீப்பிடிக்கும் பேட்டரிகள்

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கார், பைக்குகள் தீப்பிடித்து எரிவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அதே போலத்தான் மின் வாகனங்களும். அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அதிக தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகள் பெரும்பாலான மின் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதே. இந்த தீ விபத்துக்களுக்கு அலட்சியமும் பெரும்பங்காற்றுகிறது. இதுபோன்ற

வாகன தீ விபத்துகளை முறையான பராமரிப்பு இருந்தால் 80 விழுக்காடு குறைத்துவிடலாம்

என்கிறார்கள் வல்லுநர்கள். நம்பிக்கையான நிறுவனத்திடம் இருந்து மட்டுமே பேட்டரிகளை வாங்குதல், அதிக சார்ஜ் செய்யப்படுவதைத் தவிர்த்தல் போன்றவற்றால் விபத்துக்களைக் குறைக்க முடியும்.

விதி மீறுவதால் அதிகரிக்கும் விபத்து

வாகனங்களில் ஒலி மாசு குறைக்கப்பட வேண்டும் என்றும் ஒலிப்பான் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும் நேரத்தில், மின் வாகனங்களில் சத்தம் குறைவாக இருப்பதும் ஒரு பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. சப்தம் இல்லாத வாகனங்களைக் கவனிக்காமல் சென்று பாதசாரிகள் மோதிவிடுவதும், வாகனங்கள் கடந்து சென்ற சில நொடிகளில், அதனை அறிந்து பாதசாரிகள் அச்சம் அடைவதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். மின் வாகனங்கள் தீப்பிடித்தல்,

கவனக்குறைவால் நேரிடும் விபத்துக்களை விட சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காததால் நேரிடும் விபத்துகளே அதிகம்

நடைபெறுகிறது. வாகனத்தை இயக்கத் தொடங்கும் போது நேரிடும் அதிக அதிர்வும் குறைக்கப்பட வேண்டி இருக்கிறது.

சாதகங்கள்

இயக்குவதற்கு எளிதானது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஆகும் செலவை விட குறைவாகவே செலவாகும். பராமரிப்பு செலவு மற்றும் ஒலி மாசு குறைவு போன்றவை சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. 

பின்னடைவுகள்

விலை அதிகமாக இருப்பதும், மின் வாகனங்களுக்கு தரமற்ற பேட்டரிகள், உதிரி பாகங்கள், மின் சாதனங்கள் பயன்படுத்துவதும்,

சார்ஜ் போடும் மையங்கள் குறைவாக இருப்பதும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆவதும் பின்னடைவாக

பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய வாகனமாக இருந்தாலும் எரிபொருள் நிரப்புவது என்பது சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் மின் வாகனங்களுக்கு சார்ஜ் போடும் பணி என்பது குறைந்தது அரை மணி நேரமாவது ஆகிவிடுகிறது.  

விபத்தைத் தவிர்ப்பது எப்படி?

உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பின் மூலம் பேட்டரி விபத்துக்களைத் தவிர்க்கலாம். பேட்டரி சார்ஜ் செய்யும் போது, குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட வகையான மின் சாதனங்களைப் பயன்படுத்தி மட்டுமே சார்ஜ் செய்வது அவசியமானது. அத்துடன்

தலைக்கவசம் அணிதல், கவனக்குறைவை தவிர்த்தல், சாலை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்குதல், வாகன பராமரிப்பு போன்றவற்றின் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்,

குறைக்கலாம். இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது, விலை குறைவானது என்று பாதுகாப்பற்ற தரமற்ற நிறுவனங்களின் வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தாமல், தரமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உயர்தரமான வாகனங்களை வாங்கி பயன்படுத்துவது நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே