வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் மொத்தம் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தங்களது வாக்காளர் அட்டையை சரிபார்த்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே