லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்க இந்தியா – சீனா முடிவு எனத் தகவல்..!!

இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை 3 கட்டங்களாக திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா சீனா எல்லை பிராந்தியமான லடாக்கில் கடந்த ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே பதற்றத்தை தனிக்க நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தையில் சீனா ஊடுருவியிருந்த கால்வான் பள்ளத்தாக்கு ரோந்துப் புள்ளி 15 உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கின. 

இருப்பினும் பாங்காங் ஏரி பகுதியில் மட்டும் சீனப்படைகள் பின்வாங்க மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி இந்திய சீனா ராணுவ தளபதிகளிடையேயான 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஏப்ரல் மாதங்களில் இரு நாட்டுப்படைகளும் எந்த பகுதியில் இருந்ததோ அப்பகுதிக்கு திரும்பச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாங்காங் ஏரி பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் ஒரு வாரத்துக்குள் 3 கட்டங்களாக படைகளை திரும்பப்பெற வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி முதல் கட்டமாக டாங்குகள் மற்றும் ராணுவ வாகனங்களை தற்போதுள்ள பாங்காங் ஏரி பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

இரண்டாவது கட்டமாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இருந்து இரு நாடுகளும் தங்கள் 30% படைகளை 3 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும்.

மூன்றாவது கட்டமாக பாங்காங் ஏரியின் தெற்கு கரை முன்களப்பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் பின்வாங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே