கடலூர் அருகே போதைக்காக மெத்தனால் குடித்தவர்களில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்து உயிரிழந்தனர்.

செங்கல்பட்டை சேர்ந்த சிவசங்கர், பிரதீப், சிவராமன் ஆகிய மூவரும் கூல்ட்ரிங்ஸில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்து பலியானார்கள்.

அதேபோல் கோவை சூலூரை சேர்ந்த பெர்னாடஸ் என்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் மதுகிடைக்காத விரக்தியில் சானிடைசரை நீரில் கலந்துகுடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சந்திரகாசி என்பவருக்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த எழில்வாணன், மாயகிருஷ்ணன், ஆணையம்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் ஆகியோரும் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற வாலிபர், கடலூர் சிப்காட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்படும் தனியார் மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும், அவர் தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனாலை தனது கிராமத்திற்கு எடுத்து வந்ததும், மேலும் அதை போதைக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் அதனுடன் தண்ணீரைக் கலந்து சுந்தரராஜ், சந்திரகாசி, எழில்வாணன், மாயகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து குமரேசன் குடித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக குமரேசனை கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்.

இதனிடையே நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரகாசி என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மாயகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தர்ராஜிவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் மெத்தனால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எழில்வாணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே