இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். இந்த வகையில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டது. காலனித்துவத்தின் பாதிப்புகள் மற்றும் வளைகுடா அகதிகளின் நிலை குறித்து இவர் எழுதியத்திற்கான இப்பரிசு வழங்கப்பட்டது.
1948-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலின் சான்சிபர் என்ற தீவில் பிறந்த அவர் 1960-ம் ஆண்டு அகதியாக இங்கிலாந்திற்கு வந்தடைந்தார். தனது 21-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கினார். தான்சானியாவில் பேசப்படும் ஸ்வாஹிலி என்ற மொழிதான் இவரது தாய் மொழி. தற்போது லண்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய ‘பை தீ சி’ (By the Sea), ‘டிசர்ஷன்’ (Desertion), ‘பாரடைஸ்’ (Paradise) ஆகியவை முக்கியமான நாவல்களாக கருதப்படுகிறது. இவர் 10 நாவல்கள் எழுதியுள்ளார். ‘ஆஃப்டர் லைப்ஸ்’ (Afterlives) என்ற நாவலைதான் இவர் எழுதிய சமூபத்திய நாவல் ஆகும்.