இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்யத்தயார் – டொனால்ட் டிரம்ப்

எல்லையில், இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லை பகுதியில், கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய – சீன எல்லையில் இருந்த சீன வீரர்கள் சிலர், காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5ம் தேதி அத்துமீறி நுழைந்தனர்.அவர்களை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டது.

இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தலையிட்டதை அடுத்து, எல்லையில் அமைதி திரும்பியது.

இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், இந்திய – சீன எல்லை பகுதி யில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின், இந்திய எல்லை பகுதிக்கு மிக அருகில், சீன ராணுவ ஹெலிகாப்டர் அத்துமீறி பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. 

இதற்கு பதிலடியாக, நம் விமானப் படை ஹெலிகாப்டரும், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.இதற்குப் பின், எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பும், வீரர்களை குவித்து வருகின்றன.

காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லையில், தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில், 5,000க்கும் அதிகமான வீரர்களை, சீன ராணுவம் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக, எல்லையில் உள்ள பான்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில், நம் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில், சமீப காலமாக, சீன ராணுவம், புதிய முகாம்களை அமைப்பது, பதுங்கு குழிகளை அமைப்பது, கனரக ஆயுதங்களை குவிப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டது.

இதையடுத்து, நம் ராணுவமும், அதிரடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது : எல்லை பிரச்னை தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதை, இந்தியா, சீனாவிடம் தெரிவித்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே