உள்ளாட்சித் தேர்தல் – 2ம் கட்ட பரப்புரை ஓய்ந்தது..!!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் பிரசாரம் இன்று (அக்.,07) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், கடந்த 6 மற்றும் வரும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 6ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் (அக்.,9) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 41.93 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 34,65,724 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இந்த 2ம் கட்ட தேர்தலில், 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே