“ஒரு அதிசய வீரன்!” – பிரசீத் கிருஷ்ணாவை புகழ்ந்த ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரசீத் கிருஷ்ணாவை பாராட்டி பேசியுள்ளார். தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அற்புதமாக பந்து வீசி அசத்தி இருந்தார் பிரசீத். இந்நிலையில் அவரை ஒரு அதிசய வீரன் என அக்தர் புகழ்ந்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் முடிந்த ஒருநாள் போட்டியில் 8.1 ஓவர்கள் வீசிய பிரசீத் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். கேப்டன் கோலி அவரது பந்து வீச்சில் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டதும் குறிப்பிடத்தக்கது. அதை பிடித்திருந்தால் அவர் 5 விக்கெட் வீழத்தியிருப்பார். 

“அவர் கிருஷ்ணன் இல்லை அவர் ஒரு அதிசயம். அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களை பாரபட்சமே பார்க்காமல் அடித்து துவம்சம் செய்திருந்தனர் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால் அதன் பிறகு அவரை கேப்டன் கோலி பந்து வீச சொல்லி பணித்தபோது அவர் ஒரு அதிசய வீரனாக மாறி அற்புதமான ஸ்பெல் வீசியிருந்தார். 

அது இந்தியாவுக்கான கம்பேக்காக அமைந்தது. ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு தேவையான திறனும், தைரியமும் அவரிடத்தில் உள்ளது. அது தான் அதிக ரன்களை லீக் செய்த பிறகும் அவர் தனது திறமையை நிரூபிக்க காரணம். அவர் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்” என அக்தர் தனது யூடியூப் சேனல் மூலம்கா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே