வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் ஒரு உதாரணம் – சிவகார்த்திகேயன் புகழாரம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியவதாவது:

ரஹ்மான் சாரின் பாடல் மற்றும் இசையுடன் தான் நான் வளர்ந்தேன். இப்போது அவருடைய ‘அயலான்’ பட பாடல்களால் வளரப் போகிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறு வயதில் இருந்தே ரஹ்மான் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. விஜய் டிவியில் ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

முன்பே நிறைய பேசக் கூடாது, குறைவாகத் தான் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொகுப்பாளர் என்பதால் புத்திசாலித்தனமாக எதையாவது கேட்க வேண்டும் என்று கேள்விகளை எல்லாம் தயார் செய்து வைத்திருந்தேன். அவரிடம் சென்று “ஆஸ்கர் வாங்குவதற்கு முன்பு இருந்த ரஹ்மானுக்கும் இப்போது இருக்கும் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “வயசுதான்” என்று சொல்லி சிரித்து விட்டு போய் விட்டார்.

என் அப்பா ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகர். நான் அவருடன் இணைந்து பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் சார் ஒரு உதாரணம். அவர் எது செய்தாலும் அதில் ஒரு சர்வதேச தரம் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே