TNPSC குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிகளுக்கான தேர்வில், கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மொத்த காலிப்பணியிடங்கள் 9882 ஆக உயர்ந்துள்ளது.

இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.

அப்போது 6417 காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

இதன் முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகிய நிலையில், அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு, மொத்த எண்ணிக்கை 9398 ஆக உயர்ந்தது.

இதனைதொடர்ந்து முறைகேடு புகார் எழுந்த நிலையில், தேர்வில் தவறிழைத்த 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 484 காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு, மொத்தமாக 9882 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே