தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்…!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார்.

இதை அடுத்து இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த மசோதா சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டு வரப்படுவதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பதில் அளித்த அமித் ஷா, இந்த சட்டத் திருத்தம் 0.001 சதவீதம் அளவுக்குக் கூட இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதால், அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்த அமித் ஷா, பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1971-ம் ஆண்டு பங்களாதேஷைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே