CAA-வை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறும் வரை போராட்டம் நீடிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் நிறைவாக, எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே, திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலின் தலைமையில் மேடையேறிய கட்சித் தலைவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அதற்கு ஆதரவளித்த அதிமுக அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.

எழும்பூரில் தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பேரணியின் நிறைவாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றாய் வாழும் இந்தியரை திட்டம் போட்டு பிரிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.

மேலும் தோழமை கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பேரணி சிறப்பாக நடந்துள்ளது என்று தெரிவித்த ஸ்டாலின் இது பேரணி அல்ல; போரணி என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறா விட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே