ஆம்புலன்ஸ் வர தாமதம்… கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த லாக் அப் புத்தக எழுத்தாளர் சந்திரன்…

நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த வடமாநில பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநரும், எழுத்தாளருமான சந்திரன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட் பகுதியில் ஏராளமான ஒடிசா மாநிலத்தவர் சாலையில் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்யும் இவர்கள், ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.

இங்கு இருக்கும் 26 வயது பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரின் கணவர் அந்த பெண்ணை தூக்கி வரும்போது அவர் பிரசவ வலியால் துடித்துள்ளார்.

தொடர்ந்து அங்குள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்து விட்டு ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் விசாரணை படத்திற்கு கருவான லாக் அப் புத்தக எழுத்தாளர் சந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர்.

எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார்.

ஆனால் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி, 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் சாலை ஓரத்திலேயே பெண்ணுக்கு பிரசவத்தை பார்த்தார் ஆட்டோ சந்திரன்.

அப்போது அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை அறுத்து தாய்,சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த காட்சிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தக்க நேரத்தில் வந்து உதவிய எழுத்தாளர் சந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே