உச்ச நீதிமன்ற கதவை தட்டியது அதிமுகவின் நாடகம் : ஸ்டாலின் விமர்சனம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாத படுதோல்வியை மறைக்கவே உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி அதிமுக அரசு நாடகம் ஆடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் கட்டாயம் என்று சட்டம் பிறப்பித்த போதும்; நீட் தேர்வை அமல்படுத்தி அனிதா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலைக்கு வித்திட்டதும் அதிமுக அரசு தான் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

நீட் விலக்கு கோரிய மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை, பேரவைக்குச் சொல்லாமல் அதிமுக மறைத்ததாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மாணவ, மாணவியருக்கு துரோகம் செய்து, திரிசங்கு நிலையில் அதிமுக நிறுத்திவைத்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வு உண்டா, இல்லையா என்று அதிமுக கடைசி வரை குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தாமதமாக நினைவு வந்ததைப் போல் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, நாணமின்றி நடுப்பகல் நாடகம் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரங்கேற்றி இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே