மாணவியின் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய சூர்யா!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவி ஒருவர் தனது கல்வி கனவு நனவாக தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்ததைக் கேட்டு மேடையிலிருந்த நடிகர் சூர்யா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர்.

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்குத் தரமான கல்வியை கொடுக்கும் நோக்கத்தில் அகரம் அறக்கட்டளையை நடிகர் சூர்யா நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் சா.மாடசாமி எழுதிய வித்தியாசம்தான் அழகு என்ற நூலையும்; உலகம் பிறந்தது நமக்காக என்ற வாழ்க்கைத்திறன் பயிற்சி கையேட்டையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். 

விழாவில் நடிகர் சூர்யா, ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் நாகராஜ், சத்யபாமா பல்கலைகழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அகரம் அறக்கட்டளை மூலம் தனது கல்வி கனவு நனவானதை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விவரித்தார்.

மிகவும் ஏழ்மையான சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையை இழந்து, தாயாரின் ஒற்றை தினக்கூலியில் வாழ்க்கையை நகர்த்தி, அகரம் அறக்கட்டளை மூலம் படித்து, வேலைவாய்ப்பு கிடைத்த வரையில், தாம் பட்ட கஷ்டங்களை அந்த மாணவி விவரித்தார்.

அப்போது நடிகர் சூர்யா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர்.

பின்னர் நடிகர் சூர்யா எழுந்து சென்று மாணவியை அரவணைத்து ஆறுதல் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே