தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் – ஜி.வி.எல்.நரசிம்ம ராவ்

தமிழக பா.ஜ.க தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 5 மாதங்களாக அந்த பதவி காலியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னை தியாகராயநகரிலுள்ள, அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருத்து கேட்பு குழுவின் பொறுப்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், கட்சியின் முன்னணி தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது என்றும்; அவை பரிசீலனை செய்யப்பட்டு முறையாக தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே மாநில துணை தலைவராக பதவி வகித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராமு, மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே