மதுரவாயலை கைப்பற்ற திமுக – அதிமுக கடும் போட்டி: மநீம, நாம் தமிழர் கட்சிகளும் தீவிர பிரச்சாரம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே இங்கு வெற்றி பெற்றுள்ளது.

2011-ல் நடந்த முதல் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீம்ராவ் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் வெற்றி பெற்றார். சாலைகள், பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நீண்ட காலமாக முடங்கியுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின் 2-வது முறையாக போட்டியிடுகிறார். தனது பதவிக் காலத்தில் இத்தொகுதியில் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடியராகவும், எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பதும் பெஞ்சமினுக்கு சாதகமாக உள்ளது.

இவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களைப் பற்றி எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பத்மப் பிரியா, நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் கணேஷ்குமார் ஆகிய இருவரும் இளைஞர்களை குறி வைத்து வாக்குச் சேகரிக்கின்றனர். இத்தொகுதியில் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் இருப்பதால், அவர்கள் இருவரும் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அதிமுக, திமுகவுக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இந்த பலத்த போட்டியில் அமைச்சர் பெஞ்சமினுக்கு மதுரவாயல் வாக்காளர்கள் மீண்டும் வாய்ப்பு அளிப்பார்களா அல்லது உதயசூரியனை இங்கு உதிக்க வைப்பார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே