சசிகலா சென்னை திரும்பும்போது அவரை அதிமுக நிர்வாகிகள் பலரும் வரவேற்பார்கள் என்றும், ஏன் நமது ஓ.பன்னீர் செல்வமே சென்னையின் எல்லையில் நின்று சின்னம்மாவை வரவேற்பார் பாருங்கள் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல் நலக்குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகி தற்போது பெங்களூரு புற நகர் பகுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அவரது காரில் அதிமுக கொடியுடன் சென்றது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும்? என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சசிகலா.

அவருக்குதான் கட்சியில் முழு அதிகாரம் உள்ளது என்றார்.

மேலும், அதிமுகவில் பலரும் சின்னம்மாவை வெளிப்படையாக ஆதரிப்பார்கள் என்றும், சசிகலா சென்னை திரும்பும் போது அவரை அதிமுக நிர்வாகிகள் பலரும் வரவேற்பார்கள் என்றும், ஏன் ஓ.பன்னீர் செல்வமே சென்னையின் எல்லையில் நின்று நமது சின்னம்மாவை வரவேற்பார் பாருங்கள்” என்றார்.

அத்துடன், அமமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில், “சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என்று இணை ஒருங்கிணைப்பாளர்தானே சொல்லுகிறார்? ஒருங்கிணைப்பாளர் சொல்லவில்லையே என கருத்துச் சித்திரம் வெளியிட்டுள்ளது.

மேலும், ஓபன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சசிகலாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த மகன் ஜெயபிரதீப்பை, ஓ.பன்னீர் செல்வம் கண்டிக்கவில்லை என்பாதலும், டிடிவி தினகரன் கருத்துக்கு இதுவரை அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதாலும் தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே