2021 தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த வாரம் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே, கோவையில் மூன்று கோயில்களின் முன்பு டயர்கள் எரிக்கப்பட்டு, கோயிலின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டன.

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக, பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் சரணடைந்தார்.

கஜேந்திரன்
கஜேந்திரன்

கோயில்களை சேதப்படுத்திய வழக்கில், சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், “கஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் எந்த கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை” என்று கோவை போலீஸார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், “இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை” என தமிழக பி.ஜே.பி கூறியுள்ளது. தமிழக பி.ஜே.பி தலைவர் முருகன், “கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது.

இது தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் மீது நடைபெறும் தாக்குதலாகப் பார்க்கிறேன். போலி மதச்சார்பின்மை பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தக்க சமயத்தில் மக்களே அவர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

பி.ஜே.பி புகார் மனு
பி.ஜே.பி புகார் மனு

இதனிடையே, கோவையில் இந்துக் கோயில்களைத் தீவைத்து, தொடர்ந்து இந்து மதக் கலாசாரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், பா.ஜ.க புகார் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை.

இந்த வழக்கில், போலீஸார் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்கவில்லை.

ஒரு சிசிடிவி கேமரா பதிவை வைத்துக் கொண்டு, அவர்தான் 4 கோயில்களையும் சேதப்படுத்தினார் என்று சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சேதப்படுத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் ஏற்க முடியவில்லை.

உண்மை குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுவோம்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.

இப்படியே இருந்தால் வருகிற தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்று கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே