எம்ஜிஆர் குறித்து கமல் பேச்சு..; நமது அம்மா நாளிதழ் காட்டம்..!!

எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தி கொள்ளலாம் என்பது பித்தலாட்டமாகும் என்று நமது அம்மா நாளிதழில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தான் எம்ஜிஆர் மடியில் வாழ்ந்தவன் என்று தனது பரப்புரை கூட்டங்களில் எம்ஜிஆரின் புகழை பாடி வருகிறார்.

அதேபோல் ரஜினிகாந்தும் இன்னொரு எம்ஜிஆராக தான் மாற முடியாது ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று கூறி வருகிறார்.

இந்த சூழலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில், “மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுபவர்கள் வேண்டுமானால், அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைப்பதும்; தங்களின் அரசியல் இயக்கத்திற்கு புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடியாக்கி பிழைக்கலாம் என கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாராட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னைக் காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்லாமல், அவ்வை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா? அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக் கொள்வதும் அனேகமாக ஒன்றுதானே ” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே