விவசாய குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் பழனிசாமி 40 ஆண்டுகால இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றினார்: அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

தற்போதுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி விவசாயி. விவசாய குடும்ப பின்னணியில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் வந்துள்ளார். இவர் வன்னியர்களின் 40 ஆண்டு போராட்டத்துக்கு செவி சாய்த்து 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல. அது ஒரு சமூக பிரச்சினை. வன்னியர்களுக்கு மட்டுமல்ல இதுபோல் சமூகத்தில் பின்தங்கியுள்ள அனைவருக்கும் இட ஒதுக்கீடு அவசியம். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கூட மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளித்தது முதல்வர் பழனிசாமிதான்.

திமுக தாய்மையை மதிக்கத் தெரியாத கட்சி. சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா முதலமைச்சரின் தாயார் குறித்து கொச்சையாக பேசினார். திரைப்பட நடிகை நயன்தாரா குறித்து தவறாக பேசியபோது உடனடியாக ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரின் தாயாரை பற்றி அவதூறாக பேசிய ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கட்சியில் உள்ள எந்தத் தலைவரும் ஏன் அவரை கண்டிக்கவில்லை. தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முதலமைச்சராகி 4 ஆண்டுகள்தான் ஆகிறது. அவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்தால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றார்.

இதில் அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே