சோனியா காந்தி, சரத்பவார் சந்திப்பில் நடந்தது என்ன?


மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக வரும் நாள்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா கூட்டணிக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அங்கே ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவிவருகிறது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிராவில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடனும் நாங்கள் விவாதிக்கவேண்டும்.

மகாராஷ்டிரா சூழல் குறித்து கவனித்துவருகிறோம். வரும் நாள்களில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

மகாராஷ்டிராவில் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஓரிரு நாள்களில் டெல்லியில் நடைபெறும்.

எங்கள் சந்திப்பில் ஆட்சியமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் குறித்தும் தேசியவாத காங்கிரஸ் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் சூழல் குறித்து ஆலோசித்தோம். அங்குள்ள சூழல் குறித்து நான் சுருக்கமாக சோனியா காந்தியிடம் விளக்கினேன் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே