புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு சிம்பு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60).

இவா், கிழக்குச் சீமையிலே படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருகிறாா்.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபா் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவா்,

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளாா். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாா்ச் மாதம் முடிந்துள்ளது.

இவா், கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் காா் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவச் சிகிச்சைப் பெற்று மீண்டாா். அப்போதுதான் புற்றுநோய் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சை பெற்று வந்தாா்.

இருப்பினும், போதிய பணமின்றி சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டாா்.

மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 3 நாள்களாக புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதனிடையே தனக்கான மருத்துவச் சிகிச்சைக்கும், வறுமையில் வாடும் தனது குடும்பத்தினருக்கும் நிதியுதவி கோரிய விடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது.

இதையறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பா. சரவணன், தனது மருத்துவமனையில் வைத்து நடிகா் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.

இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ், மகள் முத்தரசியும் உள்ளனா்.

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் கம்பீர மீசையும் இல்லாமல் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் தவசி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் ரூ. 25,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத் தலைவர் மோகன், தவசியிடம் நிதியுதவியை நேரில் வழங்கினார்.

நடிகர் சூரி, தவசிக்கு முதற்கட்டமாக ரூ. 20,000 நிதியுதவியும் தவசி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று வேளை உணவும் வழங்க முன்வந்துள்ளார்.

நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் செளந்தர் ராஜா, விஜய் சேதுபதி சார்பில் ரூ. 1 லட்சத்தை தவசியிடம் நேற்று நேரில் வழங்கினார். செளந்தர் ராஜா, ரூ. 10,000 வழங்கியுள்ளார்.

தவசியின் நிலைமையைக் கேள்விப்பட்ட ரஜினி, அவருடைய குடும்பத்தினரிடம் போனில் பேசி நலம் விசாரித்துள்ளார். மேலும் பண உதவியும் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தவசிக்கு சிம்பு ரூ. 1 லட்சம் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி 50,000 ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே