நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்படுகிறது.

இன்று முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

அதன் பிறகு பேசிய முதல்வர், “அரசு பள்ளி மாணவர்களுக்கான நன்னாள் இது. அரசு பள்ளியில் படித்தவன் என்கிறவன் முறையில் எனக்கு மன நிம்மதியை ஏற்படுத்திய நாள்.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு இன்று நினைவானது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசிடமும் அதனை வலியுறுத்தியுள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும், பல தடைகளை தாண்டி 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. நான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து புதியதாக 1990 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே