மாவட்ட சேர்மன் பதவியிடங்களை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிகளின் மறைமுக தேர்தலில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. இதேபோல் திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை வென்றுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு இன்று காலை மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுகவும், திமுகவும் சமமான உறுப்பினர்களை கொண்டிருந்ததால், தேர்தல் நடத்தப்படவில்லை.

எஞ்சிய 26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றின.

கோவை, தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.

அதிமுக கூட்டணியிலிருக்கும் பாமக, சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது.

மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி ஆகிய 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக வென்றுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 149-க்கும் மேற்பட்ட இடங்களையும், திமுக சுமார் 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே