விருதுநகர் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியதையடுத்து தனது துப்பாக்கியுடன் ரத்தம் சொட்ட சொட்ட 4 பேரை தேடிய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 5 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும், சுயேச்சை இரு இடங்களிலும் அமமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்று வந்தது. அப்போது அதிமுக, திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் சுயேச்சைகளின் ஆதரவை பெற இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த விருதுநகர் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
அவர்களை பிடிக்க முயன்ற போலீஸார் மீது கற்களையும் வீசினர்.
மிகவும் பதற்றமான வாக்குச் சாவடியான நரிக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையிலும் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும் 4 பேரை பிடிக்க துப்பாக்கியுடன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட டிஎஸ்பி தேடுதல் வேட்டை நடத்தினார்.
இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள மீதி இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.