ஜோலார்பேட்டை அருகே திரைப்பட பாணியில் தொழிலதிபரை கடத்தி 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டதாக கூறப்படும் தொழிலதிபரை மீட்டுள்ள போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
அத்தனாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வழக்கம் போல் 8 மணிக்கு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் ராபீன் செல்போன் நம்பருக்கு அழைத்த அருள் தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னை மீட்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து ராபீனுக்கு போன் செய்த மர்மநபர், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் அருளை விடுவோம் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அருளின் மனைவி சாந்தி அளித்த புகாரின்போரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த செல்போன் நம்பர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ளது தெரியவந்தது.
இதனிடைய ராபீனை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், பணத்தை குப்பம் மற்றும் கர்நாடக மாநில எல்லையான பங்காருப்பேட்டை இடையில் உள்ள வனத்தில் வந்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கடத்தல் காரர்கள் சொன்ன இடத்துக்கு பணத்தை கொடுப்பது போன்று சாதாரண உடையில் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து அருளை மீட்டதாக கூறப்படுகிறது.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
கடத்தலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.