சென்னையில் தண்ணீர் லாரி மோதி தாத்தா – பாட்டி கண்முன்னே பலியான 4 வயது சிறுவன்

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியதில் தாத்தா,பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 வயது பேரன் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இன்று காலை வழக்கம் போல் வாகனப்போக்குவரத்து இருந்தது. பட்டினப்பாக்கம் சிக்னல் அருகில் குடிநீர் வழங்கல் வாரியம் தண்ணீர் சேகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் சேகரித்து அனுப்பப்படும். இதற்காக இந்த சாலையில் தண்ணீர் லாரிகள் அதிகம் செல்லும்.

இப்பகுதியில் அடையாறு, மயிலாப்பூர், நந்தனம் நோக்கி வாகனங்கள் செல்ல ஒரே சாலை என்பதால் அதிக வாகன நெரிசல் இருக்கும். இந்நிலையில் காலை 8-15 மணி அளவில் பட்டினப்பாக்கத்திலிருந்து அடையாறு நோக்கி வழக்கமாக செல்லும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன, அப்போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அதனால் அங்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது.
இதில் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அந்த வாகனத்தில் தரமணியைச் சேர்ந்த தம்பதி தனது 4 வயது பேரனுடன் தரமணி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தனர்.

லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அவர்களுடன் பயணித்த 4 வயது பேரன் பிரணிஷ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர்கள் மீது மோதிய லாரி மேலும் சில இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது அதில் 3 வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தனர்.

இருசக்கர வாகனங்கள் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தன.

லாரி நிற்காமல் சென்று பட்டினப்பாக்கம் சிக்னல் கம்பத்தின் மீது மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் இறங்கி ஓடிவிட்டார்.

உயிரிழந்த சிறுவன் உடலைப்பார்த்து பாட்டியும், தாத்தாவும் கதறி அழுதனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த 3 பேரையும் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர் .

மேலும், விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே