5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

அதில் 5-ம் வகுப்பிற்கு 1 கிலோமீட்டர் தொலைவிலும் 8-ம் வகுப்பிற்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

அரசின் இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வரக்கூடிய சூழ்நிலையில் தேர்வு மையங்கள் மாணவர்கள் பயில கூடிய பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அரசின் முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் 5 மற்றும் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தாங்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே