தி.மு.க அவசர செயற்குழுக் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு திமுக தலைமை அவசர செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தலைமைச் செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 550 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த தி.மு.கவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவிற்கு கட்சியின் தலைமை பதவிகளில் ஒன்றான முதன்மைச் செயலாளர் பதவி அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

முன்னாள் அமைச்சரும் உயர்மட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலுவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே