தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படத் தொடங்குகின்றன.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்திலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன.

மாணவர்களுக்கான வகுப்புகள் இணைய வழியிலும் தொலைக்காட்சி வழியிலும் நடைபெற்று வந்தன.

பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்டமாக கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 2ம் கட்டமாக 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படத் தொடங்குகின்றன. 

பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும், மாணவர்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளியின் நுழைவு வாயிலிலேயே மாணவர்கள் வெப்பநிலை பரிசோதனை உட்படுத்தப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் முகக்கவசம் வழங்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளதால் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சுழற்சி அடிப்படையில் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே