தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது தேமுதிகவுக்கு பெரிய விஷயம் அல்ல.கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக காத்திருக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தென்சென்னை மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம்மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது :
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்.
தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைத்து பணிகளையும் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த தேர்தலில் கூட்டணியா, தனித்து போட்டியா என்ற குழப்பம் வேண்டாம். தேமுதிக செயற்குழு கூடி, தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். கட்சி நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலம் தினமும் பார்க்கிறார்.
வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனவே, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்பது தேமுதிகவுக்கு பெரிய விஷயமே அல்ல.
தேமுதிக இப்போதும் தனித்து போட்டியிட்டால் 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெறும்.
ஆனாலும், கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக காத்திருக்கிறோம்.
இந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. இத்தேர்தலில் தேமுதிக இல்லாமல் யாரும்ஆட்சி அமைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.