ரூ.10,000 கோடி சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என பாஜக – அதிமுக அரசுகள் கை கோத்துள்ளன என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை :
“சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று, கரோனா பேரிடர் காலத்திலும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு முறையிட்டிருப்பதற்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கரோனா பெருந்தொற்று தடுப்பு’, ‘ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்பது’, ‘மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பது’ உள்ளிட்ட எதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதை விட ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து எதிர்க்கும் சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தில், இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும் என்று நேற்றைய தினம் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
கடந்த 8.4.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த மிகத் தெளிவான தீர்ப்பின் மூலம், இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்குத் தேவையான நில எடுப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
இத்திட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகள், தாய்மார்கள், அப்பாவி மக்கள் ஆகியோரைக் காவல்துறையை வைத்து மிரட்டியது, அடக்குமுறை மூலம் இந்தச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு கட்டவிழ்த்து விட்ட அராஜகங்கள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக அந்தத் தீர்ப்பில் விமர்சனம் செய்திருந்தது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, ‘மேல்முறையீடு செய்ய மாட்டேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியளித்தார்.
ஆனால், தமிழகத்தில் 39-க்கு 38 தொகுதிகளிலும் குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அதிமுக சந்தித்தது.
உடனே அந்த வாக்காளர்களைப் பழிவாங்க சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்த போது, பலமுறை தடையுத்தரவு பிறப்பிக்க மறுத்தும் மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் உள்நோக்கத்துடன் கை கோத்துக்கொண்டு, திரும்பத் திரும்ப உச்ச நீதிமன்றத்தின் கதவினைத் தட்டி எப்படியாவது இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, சேது சமுத்திரத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் வசதியாக மறந்து விட்ட பாஜக அரசு, ‘சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்.
ஆகவே விரைந்து விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அதிமுக அரசும் போட்டி போட்டுக் கொண்டு இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட தவியாய்த் தவிக்கிறது!
விவசாயி என்று புதிய அவதாரம் எடுத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவசரப்படுகிறார்.
சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் விதத்தில் பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தத் துடிக்கிறார்.
ஏழை விவசாயிகளின் உயிரோடும், வாழ்வோடும் கலந்து விட்ட சின்னஞ்சிறு துண்டு நிலங்களைக் கூடப் பறித்து, அவர்களின் கண்ணியத்தைச் சூறையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட விவசாயி வேடத்தை மேல்முறையீடு மூலம் கலைத்து விட்டு மக்கள் விரோதத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி அவசரப்படுகிறார்; ஆத்திரப்படுகிறார்!
விவசாயம், சுற்றுச்சூழல், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் அதிவேகமாக நாசமாக்கி விட வேண்டும் என்று அதிமுக அரசும் மத்திய பாஜக அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருப்பது, அப்பாவித் தமிழக மக்களுக்கு எதிரான மாபாதகச் செயல் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆகவே, மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஐந்து மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் ஜனநாயக ரீதியாக உரிய மதிப்பளித்து, இந்தப் பசுமைச் சாலைத் திட்டத்தை தற்போதுள்ள வழிக்குப் பதிலாக, விவசாயிகளுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் செயல்படுத்துவது குறித்து மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் ஆக்கபூர்வமாக ஆலோசிக்க முன்வரவேண்டும்.
அப்படியும் இல்லையென்றால், ஏற்கெனவே இருக்கின்ற சாலையை மேம்படுத்தி மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்;
எத்தனையோ முன்னுரிமைப் பணிகள் அணிவகுத்து முன் நிற்க, இந்தத் திட்டத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்திக் கொண்டு, மக்களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியையாவது தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.