10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தனி அறை ஏற்பாடு செய்து தரப்படும் என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவது, கடினம் என கருதினால், அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.
மற்றொரு வழிகாட்டுதல்படி, மாணவர்களில் யாருக்காவது, உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருந்தாலும், ஒருவேளை, அந்த மாணவர் தயார் என்றால், தேர்வு எழுத தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
அவருக்கு தனி கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேர்வு எழுதாமல், வீட்டுக்குச் செல்ல விரும்பினால், அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பலாம். அவர் துணைத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காய்ச்சல் இருந்தாலும், விரும்பினால், மாணவர்களை தனி அறையில் அமர வைத்து தேர்வு நடத்த வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தாலோ அல்லது கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டாலோ, மாணவர்களுக்கு என்ன வழி முறைகள் பின்பற்றப்படும் என்ற ஒரு சந்தேகம் இருந்தது.
அதனை தெளிவுபடுத்தும் விதமாக இந்த வழிகாட்டு, நெறிமுறைகள் இருக்கின்றன.
வழிகாட்டு நெறிமுறைகள் இப்படி இருந்தாலும், காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம், தனி அறை, தனி கழிவறை சாத்தியமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்துள்ளது.
ஜூன் 15 முதல், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 தொடங்க உள்ளது. தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களும் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.