TNPSC முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாருக்கு 7 நாள் போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று ஆஜர்படுத்தப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 23ஆவது மாஜிஸ்திரேட் கவுதமன் முன்பு நேற்று சரண் அடைந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாரை நீதிமன்றக் காவலில் ஒருநாள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்ட ஜெயக்குமார், பின்னர் பலத்த பாதுகாப்புடன் இன்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், ஆதலால் 10 நாள்கள் அவரை காவலில் அனுமதிக்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஜெயக்குமார் தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், போலீஸ் காவலில் தன்னை அனுப்ப வேண்டாம் என்றும் நீதிபதியிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை நீதிபதி பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் வழக்கு மீது பிற்பகலில் மீண்டும் விசாரணை நடத்திய நீதிபதி, ஜெயக்குமாரை 7 நாள்கள் சிபிசிஐடி போலீஸார் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே