திருச்சி காவல்நிலையங்களில் பணப்பட்டுவாடா – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்..!!

திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஒவ்வொரு காவலருக்கும் அவர்களது பதவிக்கு ஏற்ப 2 ஆயிரம், பத்தாயிரம் என கவரில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

காவல்துறையினருக்கு கவரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணக்கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய்த கவருடன் விசாரணை நடத்தினர்.

கன்டோன்மென்ட், உறையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட கவர்கள் (பணத்துடன்) பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் அரசு மருத்துவமனை காவல் நிலையம், தில்லை நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினருக்கு பணம் வழங்கியது திமுகவினரே என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன்னுடைய பெயரை களங்கப்படுத்தி அவதூறு பரப்புவதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கே.என்.நேரு கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே