நிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து..!!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்றும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமான சேவை நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் வழக்கம்போல் தூத்துக்குடி பெங்களூரு இடையிலேயான விமான சேவை நடைபெறும் என தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் ஓடுதளங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் கழிவு நீர் கால்வாய் குழாய்களின் பழுதுநீக்கம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான ஓடுத்தளங்கள் மற்றும் நிறுத்துமிடங்களில் அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து புயலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விமான நிலைய கட்டடத்தின் இலகுவான பாகங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே