5 நாட்கள் நடைபெறும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் துவங்கியது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

இந்த ஆண்டு 896 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்று ஜுலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வெழுதிய 5 லட்சத்து 50 ஆயிரம் பேரில் இந்திய அளவில் 11,845 பேரும், தமிழக அளவில் 610 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் இன்று முதல் இந்தியா முழுவதும் 24 மையங்களிலும், தமிழகத்தில், சென்னையில் மட்டும் 2 மையங்களிலும் நடைபெறுகின்றன.

சென்னையில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் துவங்கியுள்ளது.

காலைத் தேர்வுகள் 9 மணி முதல் 12 மணி வரையும்,

பிற்பகல் தேர்வுகள் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறுகின்றன.

முதல் நாளான இன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடைபெற்றுவருகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாளில் காலை மற்றும் பிற்பகலில், பொது அறிவு 1 முதல் 4 தாள்கள் வரையிலான தேர்வுகள் நடைபெறுகின்றன.

28-ஆம் தேதி இந்திய மொழிகளில் ஒரு தாள் மற்றும் ஆங்கிலத் தேர்வுகளும், 29-ஆம் தேதி விருப்பப்பாடம் முதல் மற்றும் 2-ஆம் தாள் தேர்வுகளும் நடைபெறுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே