அகமதாபாத்தில் இன்று 3-வது டி 20 ஆட்டம்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதில் இருந்து மீண்டு வந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது

இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியானது இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யக்கூடும். மீண்டும் ஒருமுறை சுதந்திரமாகவும், அச்சமின்றிபேட்டிங் செய்வதற்கான புதியஅணுகுமுறையை இந்திய அணிகட்டமைத்து முன்னெடுத்துச்செல் லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷனின் சேர்க்கை அணிக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. தொடக்க வீரராக தனது அறிமுக ஆட்டத்திலேயே அவர் 32 பந்துகளில், 56 ரன்கள் விளாசி அசத்தினார். பயமில்லாத அவரது தாக்குதல் ஆட்டம் கேப்டன் விராட் கோலியையும் அழுத்தமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெரிதும் உதவியது. இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கடந்த இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடத் தவறிய கே.எல்.ராகுல் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரு ஆட்டங்களிலும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சிலும் கடந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தது. அதிரடிபட்டாளத்தை உள்ளடக்கிய இங்கிலாந்து அணியை 164 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தனர். அதிலும் கடைசி 5 ஓவர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் 35 ரன்களை மட்டுமே சேர்க்க அனுமதித்திருந்தனர். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை முழுமையாக வீசியது அணியின் சமநிலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

முதல் ஆட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியின் செயல்பாடும் சிறப்பாக இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. கடந்த இரு ஆட்டத்திலும் ரிஷப்பந்த் 4-வது வீரராக களமிறக்கப் பட்ட நிலையில், அவரிடம் இருந்து நிலையான ஆட்டம் வெளிப்படவில்லை. பேட்டிங்கை சிறப்பாக தொடங்கும் அவர், விரைவிலேயே ஆட்டம் இழப்பது சற்று பலவீனமாக உள்ளது. இதை அவர் உணர்ந்து செயல்படக்கூடும்.

இங்கிலாந்து அணியினர் கடந்த ஆட்டத்தில் வேகம் குறைந்த ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தங்களை தகவமைத்துக்கொள்ள தவறினர். குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் மார்க்வுட் களமிறங்கவில்லை. எனினும் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கக்கூடும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே